Monday 19 May 2014


 ஏன் இந்த மனிதர்கள்  இப்படி இருக்கிறார்கள் ?

புரிந்துக் கொள்வதற்கு இன்னும் எத்தனை  காலம் ஆகுமோ?

முழுமையாய் வாழ்க்கையை  புரிந்துக்  கொள்வதற்கு  இன்னும்  எத்தனை அனுபவம்  தேவைப்படுமோ என்று மனம் அஞ்சுகிறது ; இன்னும் எத்தனை  முதிர்ச்சி அடையவேண்டுமோ என்று மனம் பயம் கொள்கிறது ; இன்னும் எத்தனை  ஏமாற்றங்களையும் அது தரும் வலியையும் தாங்க வேண்டுமோ என்று  அச்சம் தோன்றுகிறது; இன்னும் எத்தனை  மனிதர்களை இழக்க நேரிடுமோ என கலக்கம் கொள்கிறது . எவரிடமும் நம்பிக்கையுடன் பழக மனம் தயக்கம் கொள்கிறது.

 ஏன் இந்த மனிதர்கள்  இப்படி இருக்கிறார்கள் ?

எதனைக் கொண்டு மனிதர்களை தரம் பிரிக்கிறார்கள் ? எதனைக் கொண்டு மதிப்பிடுகிறார்கள் ? எதனைக் கொண்டு தனியொருவனை மரியாதை செய்கிறார்கள்? உறவென்றாலும், நட்பென்றாலும் எதுதான்  இவர்களின் அளவுகோல் , மதிபளிப்பதற்கு ?

 ஏன் இந்த மனிதர்கள்  இப்படி இருக்கிறார்கள் ?

ஏன் மறந்துவிடுகிறார்கள் நன்றி செய்வதற்கு? ஒரு கனமேயென்றாலும் மதிபற்றதாகாகிவிடாத அந்த செய்கைகளை, பழக்கங்களை மறந்துவிட ஏன் விளைகிறார்கள் ? நிலை தடுமாறுகையில் ஏன் ஊன்றுகோல் போல் தாங்கிக் கொள்ளாமல் உதாசீனம் செய்கிறார்கள் ? தோள் கொடுக்கவேண்டிய தோழமை தொலைவில் நிற்க தலைபடுவது ஏன் ? உற்ற நேரத்தில் உதவிய உறவுகளை விட்டு விலகிவிட விளைவது ஏன் ?

தமக்காக நேரம் செலவழித்தவர்களை , தம் வளர்ச்சி பற்றி அக்கறை கொண்டவர்களை , தம் நலனுக்காக வழிகாட்டியவர்களை , தம் கவலைகள் பகிர்ந்துக் கொண்டவர்களை, தம் உயர்வை கண்டு மகிழ்ந்தவர்களை, தம் எண்ணங்களை கிரகித்துக் கொண்டவர்களை, தம் அன்புக்கு பாத்திரமானவர்களை , தம்மை வாஞ்சையோடு அரவணைத்தவர்களை, தமக்கு துணை நின்றவர்களை தயங்காமல் இழந்துவிட துணிகிறார்கள் , மறந்து தியாகம் செய்துவிடுகிறார்கள் ...

தங்களையும் இது போன்றே மற்றவரும் தியாகம் செய்வார்கள் என்பதனை மறந்து.




சாருமதி