Saturday, 4 August 2012

நீங்காத நினைவுகள்

நிகழ்வுகள் எல்லாம் நினைவு  கூறுகையில்...

நெஞ்சம் விம்மி  அழும் நேரமெல்லாம்;
சோகத்தின் தாக்கத்தை தாங்க  திராணியில்லாமல்
துவண்ட காலமெல்லாம்;
என் துயரம் என்னுள் அடங்காது
தவித்த நொடிகள் எல்லாம்
நான் கடந்து வந்ததெங்கனம்?

தவம் போல் வாழ்க்கை ,
இம்மி  பிசகாமல் வாழும் கட்டாயநிலை
உணர்வுகளை  கடிவாளம் கொண்டு இதயத்துள்
வைக்கும் கடினமான முயற்சி
வாழ்வே  ஒரு சூன்யம், வெற்றிடம், இருட்டறை
என்பது போன்ற மன இறுக்கம்  .

என்றாலும் --
நிறைவு  உண்டு .
சுதந்திரம்  உண்டு.
தலையீடுகள்   இல்லாத
உரிமைகள் கொல்லாத
உறவுகளின் இடைஞ்சல்கள்  இல்லாத 
முழுமையான இரம்மியமான அமைதியான சூழல்
இச்சுதந்திரம் நான்  போற்றும் ஒன்று .

காதலில் கட்டுண்டு கிடக்கத்தான்
உனக்காக  பல வருடம் காத்திருந்தேன்
என்றாலும் இன்று
நான் விரும்பாத  தனிமைச் சிறை.

என் காத்திருப்பின்  பலன்:
வாழ்நாள் முழுதும் நெஞ்சம் நிறையும்
எண்ணமெல்லாம் வியாபிக்கும்
மனம்  பூரிப்படையச் செய்யும்
இனிமையான  நீங்காத நினைவுகள்

அவை --
என் வாழ்வை செழிக்கச் செய்யும் நீரூற்று
வசந்தத்தின் வைகறை
வருடும் இனிய இளம் தென்றல்

அவை --
என்னை உயிர்ப்பிக்க, புதுப்பிக்க
எனக்காக நீ விட்டுச் சென்றவை
திரும்பத்  திரும்ப என்னைத்  தொட்டுச் செல்லும்
நீங்காத நினைவலைகள் .


காலைப்  பொழுதும், சுடர் வானமும்
ஈரக் காற்றும், பனித்துளியும் புல்வெளியும்
வண்ணம் தீட்டும் வானவில்லும்
முழுநிலவின் ஒளியில் பூக்களும், பிறவும்
சரமாய் ஒளிரும் விளக்குகளும்,
நல்ல இலக்கியமும், தேர்ந்த  நல்லோவியமும் 
கொஞ்சும் கொன்றை பூங்கொத்தும் ,
மனம் மறக்கும் இசையும் ,
செறிந்த மரங்களும் , பனிமூட்டமும் , மலர்ந்த மலரும்
தவழும் நதியும் ...
இன்னும் ... இன்னும் ...
உனக்கு பிடித்த  யாவும்
உன்னையே ஞாபகப் படுத்துகின்றன
எஞ்ஞனம் மறப்பேன் ?


மனதின் சாயல்கள்  பிரதிபலிக்கும் செயல்கள் 
கருத்து  ஒருமித்து பரஸ்பரம் புரிந்து  கொண்ட நாட்கள்
ஒருவரின் நினைவில் ஒருவர் வாழ்ந்த காலங்கள்
தம் நிலை  தாம் மறந்த தூய அன்பு
இறைவனுக்கு ஒப்பு --


மறந்தும்  பிறர் மனம் நோகச்  செய்யாத குணம்
மனிதனை மனிதனாய்  மதிக்கும் நேயம்
நிர்மலமான  முகம் 
நல்லனவற்றைப்  பாராட்டும் மானசீகம்
காதல் ஒளிரும் கண்கள்
அவை சொல்லும் எண்ணங்கள்...     
எனக்கே  எனக்கென்ற காதல் நெஞ்சம்
கிடைத்தற்கு  அரிய அந்த  பொக்கிஷம்


சொல்லும் செயலும் மூச்சும்  பேச்சும்
ஒருமித்த அக்காதல்  இனிவருமா  ?


"நான் உன்னைச்  சேர்ந்தவள்  "
என்கின்ற உணர்வு
இங்கு இதுவரையில் திரும்பவும்  நான் ஏனோ பெறவேயில்லை .

என் காதல் உன்னிடமே  தொடங்கியது
எனவே உன்னிடமே முடியட்டும்
அதுவரை-
உனக்காக வாழ்ந்திடும்
எனக்காக  நீ  காத்திரு
சொர்க்கத்தின் வாயிலில் .




சாருமதி